அ.சீனிவாசராகவன் (1905 - 1975)
அ.சீனிவாசராகவன் (1905 - 1975)
அறிமுகம்
அ. சீ. ரா என அழைக்கப்பட்ட அ. சீனிவாசராகவன் பன்முகத் திறமை கொண்ட தமிழ் எழுத்தாளர். இவர் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்ற ஆங்கிலப் பேராசிரியராகவும் விளங்கினார். சிறந்த தமிழ்க் கவிஞர், பேச்சாளர், ஆய்வாளர், இலக்கியவாதி, மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்டிருந்தார். சாகித்ய அகாதமி விருது முதன் முதலாக தமிழ்க்கவிதைக்காக வழங்கப்பட்டது, அ. சீ. ராவின் கவிதைக்குத்தான். ” நாணல்’ என்பது அவரது புனைபெயர்.இவர் தன் பெயரை அ.சீநிவாச ராகவன் என்றே எழுதிவந்தார்.
பத்திரிகை ஆசிரியர்
மிகச்சிறந்த தமிழ் இலக்கியப் பத்திரிகை என்று அந்நாளில் கருதப்பட்ட ’சிந்தனை’ மாத இதழின் ஆசிரியராக இருந்து 1947 முதல் 1949 வரை நடத்தினார். இராஜாஜி, பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, பிஸ்ரீ, கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, ந. பிச்சமூர்த்தி, நீதிபதி மகாராஜன், பெ. ந. அப்புசாமி எனப்பல அறிஞர்கள் அந்தப்பத்திரிகையில் எழுதியிருக்கிறார்கள். அதில் பேராசிரியர் பல இலக்கியத் திறனாய்வுகளையும் நாடகங்களையும் கவிதைகளையும் எழுதியிருக்கிறார். அதே சமயம் திரிவேணி என்னும் ஆங்கிலப்பத்திரிகைக்கு உதவியாசிரியாகவும் இருந்தார்
இலக்கியப்பணி
கம்பனிலும் பாரதியிலும் தோய்ந்த பேராசிரியர் மிகச்சிறந்த இலக்கியச் சொற்பொழிவாளர். காரைக்குடியில் நடைபெறும் கம்பன் விழாவில் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் கலந்து ”கொள்ளாத ஆண்டே இல்லை. பேராசியர் பட்டிமண்டபச் சொற்பொழிவாளராகவும் நடுவராகவும் கவியரங்கத் தலைவராகவும் ஆற்றிய சொற்பொழிவுகள் இன்றும் நினைவு கூரப்படுகின்றன. கல்கத்தா, பம்பாய், டெல்லி என இந்தியா முழுவதும் அவர் பல இலக்கியச் சங்கங்களில் சொற்பொழிவாற்றியிருக்கிறார்.
இவர் எழுதியுள்ள நூல்கள் சில
1.மேல்காற்று, 2.இலக்கிய மலர்கள், 3.புது மெருகு, 4.ஒரு நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை, 5.வெள்ளைப்பறவை.